17 March 2009

கடலோரம் செய்த வாக்குப் பதிவு

தலைப்பில் இருப்பது - ஆங்கில Walk-u :)

எனக்கு சர்க்கரை நோய் இருப்பதால் தினமும் நடக்க வேண்டிய கட்டாயம். நான் குவைத்தில் வசிப்பதால் வீட்டுக்குள்ளேயேதான் Treadmill என்ற இயந்திரத்தில் ஏறி இருந்த இடத்திலேயே முப்பது முதல் நாற்பது நிமிடம் முடிந்தவரை தினமும் நடப்பேன்.

தினமும் நடக்கும் கட்டாயம் இருந்தாலும், விடுப்பில் இருந்தாலோ, அலுவல் காரணமாக வேறு நாட்டுக்கு சென்றாலோ, நடப்பது நடப்பதில்லை.

இம்முறை விடுமுறையிலேயே சென்னைக்கு வந்திருந்தாலும், சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப் போவதாலும், டாக்டரிடம் இருந்து திட்டு வாங்குவதை தவிர்க்கவும் பரிட்சைக்கு முதல்நாள் படிக்கும் மாணவன் போல் கடற்கரைக்கு சென்று நடக்கலாம் என்று முடிவு செய்தேன்.

கடந்த சில வருடங்களில், பல முறை மெரினாக் கடற்கரைக்கு சென்றிருந்தாலும், நடக்கவென சென்று வெகு நாட்கள் ஆகிவிட்டன. என் சகோதர்களுடன் அதிகாலை 5.30 மணிக்கு மெரினா கடற்கரை சென்றேன். ஏறக்குறைய ஏழு வருடங்களுக்கு முன்பு நடக்கச் சென்றபோது, கடற்கரை சாலையை ஒட்டி கலங்கரை விளக்கம் முதல், கண்ணகி சிலை வரை சிவப்பு வண்ண டைல்ஸ் பதிக்கப்பட்ட அழகான நடைபாதை இருந்தது. எனக்கு தெரிந்தவரை நன்றாகவே பராமரிக்கப்பட்டு வந்தது.

இப்போது, தேவையில்லாமல் (அல்லது யாருடைய காண்ட்ராக்ட் தேவைக்காகவோ) அது முற்றிலுமாக தோண்டப்பட்டு கிரானைட் கற்களால் புதிய நடைபாதை போடும் வேலை நடந்து, மன்னிக்கவும், நகர்ந்து கொண்டிருக்கிறது.

நடைபாதையில் பதிப்பதற்கென்று, கிரானைட் கற்கள் பாதையோரம் போடப்பட்டு எந்தவித பாதுகாப்பும் இன்றி கிடக்கின்றன! யார் வேண்டுமானாலும் இரவோடு இரவாக சில பல கற்களை கிளப்பிக்கொண்டு சென்றுவிடும் நிலையில்தான் இவை உள்ளன. இந்த பாதை பள பள கற்களால் முன்பைவிட அழகாகும் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால், நடையர்களுக்கு இது நிச்சயமாக ஆபத்தானதாகவே இருக்கும். வழுக்கும் தரையில் வேகமாக (brisk) நடக்கமுடியாது. விழுந்துவிடக்கூடிய வாய்ப்பும் அதிகம். அதுவும் வழ வழப்பான கருப்பு நிற கிரானைட் கற்கள் நாலைந்து அடிக்கு ஒரு முறை பார்டர் போல் போடப்படுகின்றன. அது நடப்பவர்களுக்கு இன்னும் அதிக ஆபத்தை தரக்கூடும்.

இந்த அழகு ”படுத்தும்” வேலை பல மாதங்களாக நடந்துகொண்டிருக்கிறது. ஒரு 3 கி.மீ. தூரத்தை அழகு படுத்த இத்தனை நாட்கள் தேவையா என்ற கேள்வி எழுகிறது. தகவல் அறியும் சட்டம் மூலம் அரசாங்கத்திடன் இந்த வேலை பற்றிய கேள்விகளை கேட்க தோன்றுகிறது. (யாருக்கு காண்ட்ராக்ட்? காண்ட்ராக்ட் மதிப்பு எவ்வளவு? எத்தனை நாட்களுக்குள் முடிக்க வேண்டும்? யார் யார் போட்டியிட்டனர்? எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை காண்ட்ராக்டின் வளர்ச்சி பரிசிலனை செய்யப்படுகிறது? கால தாமதங்கள் உள்ளனவா? கால நீட்டம் கொடுக்கப்பட்டுள்ளதா? எத்தனை முறை?)

சரி. விஷயத்திற்கு வருவோம்.

வழக்கமான நடைபாதை கொந்தியிருப்பதால், நடையர்கள் அனைவரும் இப்போது கடற்கரை மணலையொட்டியுள்ள உள்சாலைக்கு மாறிவிட்டார்கள். மணலில் சக்தி வாய்ந்த மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தாலும் காந்திசிலை அருகில் இருக்கும் ஓரிரண்டை தவிர வேறு எதுவும் எரியவில்லை. அதனால், நடப்பவர்கள் முழு மற்றும் அரை இருட்டில்தான் பெரும்பாலும் நடக்கிறார்கள்.

இத்தனை தொந்தரவுகள் இருந்தபோதிலும், இன்னும் சூரியன் எழாத காலையில், அரை இருட்டில், சில்லென்ற கடற்காற்றில் நடை ஒரு சுகானுபவம். நெஞ்சுக்குள் சில்லென்ற இன்னும் அசுத்தமாகாத காற்று உள்புகும் போது நடையில் ஒரு துள்ளலும் வேகமும் (ஆங்கிலத்தில் "spring in the steps" என்று சொல்வார்கள்) வந்து நடந்துகொண்டே இருக்க ஆவல் கூடுகிறது. போனஸாக, நோகியா உபயத்தில், ரேடியோ மிர்ச்சி பண்பலையில் இருந்து என் காதில் இசைத் தேன்.

எங்கள் நடையை விவேகானந்தா இல்லத்திலிருந்து துவங்கி, வடக்காக கண்ணகி சிலை வரை சென்று திரும்பி கலங்கரை விளக்கம் வரை நடத்தினோம். 35 நிமிடங்கள் பிடித்தன. 35 நிமிடங்களும் எனக்கு பிடித்தன.

கலங்கரைவிளக்கத்திற்கு அருகில் இருந்து மீண்டும் திரும்பி மகாத்மா காந்தி சிலை அருகில் வந்து வசூல்ராஜா MBBSல் போல் உரக்கச் சிரிக்கும் குழுவுக்கு பக்கத்தில் சூடான, சுவையான வெஜிடபிள் சூப்பும், மணத்தக்காளி, வாழைத்தண்டு, பாகற்காய், நெல்லிக்காய் இவைகளின் ரசம் கலந்த ஒரு புது ரசத்தையும் பருகினோம். மூன்று பேருக்கும் சேர்த்து மொத்த செலவு ரூ. 100க்குள்தான் என்பது வெளிநாட்டிலெல்லாம் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒன்று.

இந்த சுகத்தை தினமும் அனுபவிக்க மனம் தூண்டுவது தவிர்க்க முடியாத ஒன்று. அந்த சில நிமிடங்களில் என் மனதில் குவைத் கம்பெனிக்கு ராஜினாமா email தட்டச்சி, (அதுவரை பொறுத்திருந்த மூளை விழித்துக்கொண்டு, பொறுப்புகளை நினைவுறுத்த) ”send button" அமுக்குமுன் "discard" அழுத்தினேன்.

இந்த பதிவுக்காகவே ஏற்பட்டது போல் கடல் அருகில் வசந்த விழாவை ஒட்டி தீவிரவாததுக்கு எதிரான மணல் சிற்பம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அதை வீடியோ பதிவினேன் (கீழ் காண்க)



உடல் ஆரோக்கியத்திற்காக நடப்பவர்களையும், சிரிப்பவர்களையும், (என் கை ஆட்டத்தினால்) வெறும் மணலையும் எடுத்த வீடியோ பதிவு கீழே.